தொல்காப்பியர் கூறும் இலக்கணப்படியே வள்ளுவர்தம் குறட்பாட்களை அமைத்துள்ளார்

பதிவு: புலவர். . காளியப்பன் (28-06-19)

அகர முதல்னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே

இது தொல்காப்பியத்தின் முதல் நூற்பா.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
.

இது திருக்குறளின் முதற்குறள்

இலக்கணத்தில் எழுத்துகளின் தொகை கூறும்போது உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என எழுத்துகளை நான்கு வகைப்படுத்துவர். செய்யுளில் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படுத்துவர். புணர்ச்சியுள் எழுத்துகளை உயிர்க்கனம், வன்கனம், மென்கனம், இடைக்கனம் என நான்கு வகைப்படுத்துவர். இவற்றையெல்லாம் (ஆய்தம் உட்பட) உள்ளடக்கவே எழுத்தெல்லாம் என்றார். எழுத்திலக்கணம் கூறும்போது எழுத்தை முதல், சார்பு என இருவகைப்படுத்தினார் தொல்காப்பியர்.

"அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப

முதல் எழுத்துகளைச் சுட்டியதைப் பின்பற்றித் திருவள்ளுவரும் முதற்குறளை ‘அ’ எனத்தொடங்கி ‘ன்’ (பெறின்) என இறுதிக்குறளை முடித்துள்ளார்.

புணர்ச்சி இலக்கணத்தில் எழுத்தை உயிர்க்கனம்,வன்கனம், மென்கனம், இடைக்கனம் என நான்கு வகையாகப் பிரிப்பர். இதையும் வள்ளுவர் உணர்ந்திருந்ததால் வெறும் ‘அ’ எனக்கூறாமல் அகரம் என்று கரம் சாரியையை இட்டே கூறுகிறார். ‘' உயிர்க்கனம், ‘' வன்கனம், ‘ர’ இடைக்கனம், ‘ம்’ மென்கனம் என நான்கு கன எழுத்துகளால் ஆனது இந்நூல் என்பதை உணர்த்துகிறார். அது மட்டுமின்றி முதற்குறளை அகர என உயிர்க்கனத்திலும், 2ஆவது குறளைக் கற்றதனால் என வன்கனத்திலும், 3ஆவது குறளை மலர்மிசை என மென்கனத்திலும், 4 ஆவது குறளை வேண்டுதல் என இடைக்கனத்திலும் தொடங்கியதாக எண்ணலாம்.

அகர முதல் னகர இறுவாய் 31 (ஆய்தம் சேர்த்து) எழுத்துகள் இருந்தும் முதல் எழுத்துகள் இவை என உணர்த்த முப்பஃதென்றார் தொல்காப்பியர். இருந்தும் தமிழ் நெடுங்கணக்கில் 31எழுத்துகள் உள்ளன. விடுபட்ட ஆய்த எழுத்தை நினைவூட்டவே முப்பது என்னாது முப்பஃது என்று ஆய்த எழுத்தை இட்டு எழுதினார் தொல்காப்பியர். இதையெல்லாம் மனதில் கொண்ட வள்ளுவர் எழுத்தெல்லாம் என எல்லாம் என்ற சொல்லைப் போட்டார். எந்தச் சொல்லைப் பேச வேண்டும் என்றாலும் ஆவென வாய்திறக்காமல் பேச முடியாது. எனவே உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ‘அ’ என்ற எழுத்தே முதல் எழுத்தாயிற்று. அ ஆ ஆயிரண் டங்காந்தியலும் (தொல் எழு.85) என்ற தொல்காப்பிய நூற்பாவைப் போற்றி உள்ளார்.

தொல்காப்பியர் தம் நூலைக் கடவுள் வாழ்த்துடன் தொடங்கவில்லை. ஆனால் தம் நூலுள் கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருமே (தொல் பொருள்.85) என்பதால் வள்ளுவர் கடவுள் வாழ்த்துடன் தம் நூலைத் தொடங்குகிறார். உலகத்துச் சமயமெல்லாம் எம்கடவுளையே வள்ளுவர் பாடி உள்ளார் எனும்படி உள்ளது கடவுள் வாழ்த்து.

ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே

என்பது இலக்கணம்

அம்மரபினைப் பின்பற்றித் திருவள்ளுவர் முதல் நான்கு அதிகாரங்களைப் பாயிரவியல் என வைத்தார். ஒரு நூலை மங்கலச் சொல்லில் தொடங்கல் வேண்டும் என்பது மரபு. அவற்றுள்ளும் உலகை முன்னிறுத்தி உலகு எனத்தொடங்கல் மிகமிகச்சிறப்பு. சேக்கிழார்,கம்பர், நக்கீரர் போன்ற பெரும் புலவர்கள் தம்நூலை உலகு என்றே தொடங்கி உள்ளனர். மரபு மாறா வள்ளுவரும் முதற்குறளில் உலகு என்ற சொல்லை வைத்தார். எவ்வாறாயினும் வள்ளுவர் தொல்காப்பியம் உரைக்கும் மரபுப்படியே தம்நூலை அமைத்துள்ளார் என்பது வெள்ளியடைமலை. அடுத்த வெள்ளி சந்திப்போமா.

தொல்காப்பியரே துணை! வள்ளுவமே வழிகாட்டி!