தொல்காப்பியர் கூறும் இலக்கணப்படியே வள்ளுவர்தம் குறட்பாட்களை அமைத்துள்ளார்

பதிவு: புலவர். . காளியப்பன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் இன்று உலகமெங்கும் உலவி வருகிறது. உலக சமயங்களெல்லாம் திருக்குறள் எங்கள் சொத்து தங்கள் சொத்து என உரிமை கொண்டாடி வருகின்றன. மேடைதோரும் பேச்சாளர்கள் திருக்குறளை ஓங்கி ஒலிக்கிறார்கள்! எழுத்தாளர்கள், கவிஞர்கள் திருக்குறளை எடுத்தாள்கிறார்கள். அப்படிப் பட்ட திருக்குறள் உலகையே ஆண்டது. அந்தத் திருக்குறளையே ஆண்டது தொல்காப்பியம். தமிழரின் இருவிழிகள் தொல்காப்பியமும் திருக்குறளும். கண்கள் இரண்டும் ஒரே காட்சியைக் காண்பதைப் போல தொல்காப்பியமும் திருக்குறளும் மாந்தரின் வாழ்வியல் ஒன்றையே உரைக்கின்றன . தொல்காப்பியம் வாழ்வியல் இலக்கணங்களை வகுத்து உரைக்கிறது. திருக்குறள் அந்த இலக்கணங்களுக்குத் தகுந்த எடுத்துக்காட்டுகளை எடுத்து இயம்புகின்றது.

முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும் பொன்னோபோற் போற்றவம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தொல்காப்பிய வரிகளையும் அதுகூறும் பொருள்களையும் திருவள்ளுவர் அப்படியே பின்பற்றி உள்ளார். அதற்கான சான்றுகளை நான் அறிந்தவரைக் கூற விழைகிறேன்.

ஒருநூலை பொருள்தரும் முறைப்படி பெரும்பிரிவுகளுக்கும் அதன் உட்பிரிவுகளுக்கும் தனித்தனிப் பெயர்வைப்பர். காண்டம்,காதை,படலம், இலம்பகம், ஓத்து என்று பெயர் வைப்பர். தொல்காப்பியர் தம் நூலை அதிகாரம் என்ற பெயராலும் இயல் என்ற பெயராலும் பகுத்துள்ளார். தொல்காப்பியரின் வழிநின்ற வள்ளுவரும் தமது நூலை அதிகாரம் என்ற பெயராலும் இயல் என்ற பெயராலும் பகுத்துள்ளார். தொல்காப்பியர் தமது கருத்தை சூத்திரவடிவில் கூறியது போலவே திருவள்ளுவரும் தமது கருத்துக்களை சூத்திரமாகவே அமைத்துள்ளார். சூத்திரம் என்பதற்குத் தொல்காப்பியர் கூறும் விளக்கம்:

சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் (செய்யுளாக)
சொல்லுங் காலை உரையகத் தடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித்
துளக்க லாகாத் திணைமை எய்தி
அடக்க லாகா அரும்பொருட் டாகிப்
பல்வகை யானும் பயன்தெரி புடையது
சூத்திரத் தியல்பென யாத்தனர்புலவர்.
(தொல்.பொருள்.மரபியல் 101)

இந்த இலக்கணத்திற்கு முழுமையும் ஒத்துவரும்படியே வள்ளுவர் குறளை எழுதியுள்ளார் சூத்திரம் என்பது ஆசிரியப்பாகவோ வெண்பாகவோ இருத்தல் வேண்டும் என்பது தொல்காப்பியர் விதி. அந்த அடிப்படையில்தான் திருவள்ளுவர் தமது கருத்தை வெண்பா யாப்பில் பாடியுள்ளார். இருப்பதிலேயே மிகச்சிறிய குறள்வெண்பாவில் கூறியுள்ளார். (முதன்முதலில்தோன்றிய துளிப்பா குறளும் ஆத்தி சூடியும் என்பதை நினைவில் கொள்வோம்)

தொடர் - 1 (28-06-2019)

அகர முதல்னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே

இது தொல்காப்பியத்தின் முதல் நூற்பா.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
.

இது திருக்குறளின் முதற்குறள்

இலக்கணத்தில் எழுத்துகளின் தொகை கூறும்போது உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என எழுத்துகளை நான்கு வகைப்படுத்துவர். செய்யுளில் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படுத்துவர். புணர்ச்சியுள் எழுத்துகளை உயிர்க்கனம், வன்கனம், மென்கனம், இடைக்கனம் என நான்கு வகைப்படுத்துவர். இவற்றையெல்லாம் (ஆய்தம் உட்பட) உள்ளடக்கவே எழுத்தெல்லாம் என்றார். எழுத்திலக்கணம் கூறும்போது எழுத்தை முதல், சார்பு என இருவகைப்படுத்தினார் தொல்காப்பியர்.

"அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப "

முதல் எழுத்துகளைச் சுட்டியதைப் பின்பற்றித் திருவள்ளுவரும் முதற்குறளை ‘அ’ எனத்தொடங்கி ‘ன்’ (பெறின்) என இறுதிக்குறளை முடித்துள்ளார்.

புணர்ச்சி இலக்கணத்தில் எழுத்தை உயிர்க்கனம்,வன்கனம், மென்கனம், இடைக்கனம் என நான்கு வகையாகப் பிரிப்பர். இதையும் வள்ளுவர் உணர்ந்திருந்ததால் வெறும் ‘அ’ எனக்கூறாமல் அகரம் என்று கரம் சாரியையை இட்டே கூறுகிறார். ‘' உயிர்க்கனம், ‘' வன்கனம், ‘ர’ இடைக்கனம், ‘ம்’ மென்கனம் என நான்கு கன எழுத்துகளால் ஆனது இந்நூல் என்பதை உணர்த்துகிறார். அது மட்டுமின்றி முதற்குறளை அகர என உயிர்க்கனத்திலும், 2ஆவது குறளைக் கற்றதனால் என வன்கனத்திலும், 3ஆவது குறளை மலர்மிசை என மென்கனத்திலும், 4 ஆவது குறளை வேண்டுதல் என இடைக்கனத்திலும் தொடங்கியதாக எண்ணலாம்.

அகர முதல் னகர இறுவாய் 31 (ஆய்தம் சேர்த்து) எழுத்துகள் இருந்தும் முதல் எழுத்துகள் இவை என உணர்த்த முப்பஃதென்றார் தொல்காப்பியர். இருந்தும் தமிழ் நெடுங்கணக்கில் 31எழுத்துகள் உள்ளன. விடுபட்ட ஆய்த எழுத்தை நினைவூட்டவே முப்பது என்னாது முப்பஃது என்று ஆய்த எழுத்தை இட்டு எழுதினார் தொல்காப்பியர். இதையெல்லாம் மனதில் கொண்ட வள்ளுவர் எழுத்தெல்லாம் என எல்லாம் என்ற சொல்லைப் போட்டார். எந்தச் சொல்லைப் பேச வேண்டும் என்றாலும் ஆவென வாய்திறக்காமல் பேச முடியாது. எனவே உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ‘அ’ என்ற எழுத்தே முதல் எழுத்தாயிற்று. அ ஆ ஆயிரண் டங்காந்தியலும் (தொல். எழு. 85) என்ற தொல்காப்பிய நூற்பாவைப் போற்றி உள்ளார்.

தொல்காப்பியர் தம் நூலைக் கடவுள் வாழ்த்துடன் தொடங்கவில்லை. ஆனால் தம் நூலுள் கடவுள் வாழ்த்தொடு கண்ணியவருமே (தொல். பொருள். 85) என்பதால் வள்ளுவர் கடவுள் வாழ்த்துடன் தம் நூலைத் தொடங்குகிறார். உலகத்துச் சமயமெல்லாம் எம்கடவுளையே வள்ளுவர் பாடி உள்ளார் எனும்படி உள்ளது கடவுள் வாழ்த்து.

ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே
என்பது இலக்கணம்.

அம்மரபினைப் பின்பற்றித் திருவள்ளுவர் முதல் நான்கு அதிகாரங்களைப் பாயிரவியல் என வைத்தார். ஒரு நூலை மங்கலச் சொல்லில் தொடங்கல் வேண்டும் என்பது மரபு. அவற்றுள்ளும் உலகை முன்னிறுத்தி உலகு எனத்தொடங்கல் மிகமிகச்சிறப்பு. சேக்கிழார்,கம்பர், நக்கீரர் போன்ற பெரும் புலவர்கள் தம்நூலை உலகு என்றே தொடங்கி உள்ளனர். மரபு மாறா வள்ளுவரும் முதற்குறளில் உலகு என்ற சொல்லை வைத்தார். எவ்வாறாயினும் வள்ளுவர் தொல்காப்பியம் உரைக்கும் மரபுப்படியே தம்நூலை அமைத்துள்ளார் என்பது வெள்ளியடைமலை.


தொடர் - 2 (12-07-2019)

தொல்காப்பியரின் பொருளதிகாரம் இலக்கியத்தை இலக்கண வடிவில் கூறியுள்ளது திருக்குறள் இலக்கணத்தை இலக்கிய வடிவில் கூறியுள்ளது இரண்டும் ஒருபொருள் காணும் இருகண்கள் ஆகும்.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
(தொல். பொருள். 89)

என்று தொல்காப்பியர் உரைத்ததை அடியொற்றியே திருவள்ளுவரும் தமது நூலை அறம் பொருள் இன்பம் என்று பகுத்துள்ளார். திருக்குறள் அறநூலாகையால் அறத்தை முதலில் வைத்தார். மேலும் அறம் என்ற ஒருபெயரும் குறளுக்கு உண்டு ‘அறம் பாடிற்றே ஆயிழை கணவா’ என்ற தொடரை அறிவோம். இருவரும் அறத்தையும் பொருளையும் புறம் எனக்கொண்டனர். இன்பத்தை அகம் என்றனர். அகம் என்பது காமம் (இன்பம்) வாழ்வு. அதைக் களவு என்றும் கற்பென்றும் இருவகைப்படுத்தினார் தொல்காப்பியர். திருக்குறளின் இன்பத்துப்பாலும் களவு, கற்பு என இரண்டு இயல்களாகவே பிரிக்கப்பட்டுள்ளது.

ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்று

பாயிரத்துள் நுதலிய பொருள் இவையெனக் கூறப்படல் வேண்டும். அந்த அடிப்படையில் அறத்தை வலியுறுத்துவது நூலின் நோக்கம் என்பதைக் குறிக்க அறன்வலியுறத்தல் என்னும் அதிகாரத்தையும், அவ்வறத்தை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவோர் முற்றும் துறந்த முனிவர்கள் ஆதலால் அவர்களது பெருமைகளை நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தால் எடுத்துரைத்தார். அறம் எனப்படுவது இல்லவாழ்க்கையே. அந்த அறத்தைச் சொல்வது இந்நூல் என்பதைக்குறிக்க நூலின் தொடக்கத்தில் (பாயிரத்தைத்தொடர்ந்து) இல்வாழ்க்கையை வைத்தார். ஆணும்,பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு இல்லறத்தின் பயனாக நுகர வேண்டிய இன்பங்களை நுகர்ந்து அறிவறிந்த மக்களைப் பெற்று, அன்போடு (சுற்றத்தாரை) விருந்தினரைப் பேணி,இறுதியாகப் புகழ் பெறுதலே ஆகும். இதனை மனதில் கொண்டே வள்ளுவரும் இல்லறவியலின் இறுதி அதிகாரமாகப் புகழ் என்னும் அதிகாரத்தை அமைத்தார். இவ்வாறு புகழ் பெற்ற வாழ்விற்குப் பிறகே துறவை மேற்கொண்டு பேரின்பத்தை அடைய வேண்டும் என்பதற்காக துறவியலை இல்லறவியலின் அடுத்து வைத்தார். இவ்வாறு வள்ளுவர் கூறியது தொல்காப்பியர் கற்பியலின் (இல்லறவியல்) இறுதி நூற்பாவினை அடியொற்றியே ஆகும். ஈதல் இசைபடவாழ்தல் இல்லறத்தின் பயன் என்று வள்ளுவர் கூறுவது.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
. (தொல். பொருள். 190)

என்ற தொல்காப்பியத்தின் கற்பியல் (இல்லறவியல்) இறுதி நூற்பாவாகும்.

தொல்காப்பியர் களவியலில் களவுமரபாக, இலக்கணமாகச் சுட்டியவற்றுள் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனைச் சற்று விரிவாக களவியலில் இலக்கியமாக்கித் தந்துள்ளார் திருவள்ளுவர். களவியலில் குறிப்பிட்டுள்ள ஒவ்வோர் அதிகாரத்திலும் தொல்காப்பியர் கூறிய அதே கருத்துக்களைக் கூறியிருந்தாலும் குறட்பா என்ற யாப்புக் கட்டமைப்பிற்குள் பொருந்தும் வண்ணம் நுணுக்கமான உவமைகளைத் திருவள்ளுவர் கையாண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

தொல்காப்பியச் சூத்திரங்களுக்கு விளக்கமளிக்கும்போது சங்க இலக்கியப் பாடல்களைச் சான்று காட்டி விளக்கியுள்ளனர் உரையாசிரியர்கள். ஆனால் திருவள்ளுவரோ தன் குறட்பாக்களில் களவிற்கான இலக்கணத்தை வரையறுத்ததோடு மட்டுமில்லாமல் சங்க இலக்கியச் சாயலோடு படைத்திருப்பதைத் தெளிய முடிகிறது. பல்வேறு பொது, சிறப்பு விதிகளைக் கொண்ட தொல்காப்பியத்தை அடியொற்றியே திருக்குறள் அமைந்துள்ளதைத் தெளிவுற அறிய முடிகிறது. இதனை வரும் வாரங்களில் விரிவாக காண்போம் குறைதனைச் சுட்டுக. நிறையை மனதில் வைக்க.

தொல்காப்பியரே துணை! வள்ளுவமே வழிகாட்டி!