கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

தொல்காப்பிய மொட்டுகள்

மொட்டு 2. தொல்காப்பியர் கூறும் கற்பு

ஆக்கம்: புலவர் ஆ.காளியப்பன்
நாள்: 8-05-2019
*-*-*
கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால் ‘கல்+வி’ எனப்பிரியும். 
கல்+பு= கற்பு.  கற்பு என்றால் கற்பிக்கப்படுவது அல்லது கல்வி என்று நேரடிப்பொருள்.
சங்க இலக்கியத்தில் வடமொழி எழுதாக்கற்பு என்று குறிப்படப்படுகிறது. இதன்பொருள்
 எழுத்து வடிவம் இல்லாத மொழி என்பதாகும். கற்பு என்பதற்கு பெரிய திருமொழியில் திருமலைமன்னர்
ஆழி யேந்திய கையனை அந்தணர்
கற்பினை கழுநீர் வளரும் வயல்
கண்ண மங்கையுள் கொண்டேனே

இங்கு அந்தணர் கற்பு என்பது அந்தணர் கல்வி என்ற பொருளிலேயே வருகிறது.
ஔவையாரும் கற்பெனப்படுவது சொற்திறம்பாமை (கொன்றைவேந்தன்) என்கிறார்.

கழக அகராதி கற்பு என்பதற்கு கல்வி, களவுக் கூட்டத்திற்குப்பின் தலைவன் தலைவியை முறைப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம் எனப்பல பொருள்களை உரைக்கிறது. காதலனும் காதலியும் ஒரிடத்தில் சந்தித்துக் கலந்து இன்பம் துய்க்கின்றனர். இதனைக் களவு என்றும். இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள் பிறகு, பல்லோரறிய மணந்துகொள்வர். இதனைக் கற்பு என்று கூறுவர். அகத்துறையில், காதல் இன்பத்தைத் துய்ப்பதைக் களவு, கற்பு என்ற இருவகைக் கைகோள்களாகப் (ஒழுக்கம்) பிரிப்பர். கைக்கொள்ளப்பெறும் வாழ்க்கை முறை கைகோள் ஆகின்றது. காதல் சார்ந்த வாழ்க்கை முறை களவு எனவும், திருமணம் முடிந்து இல்லறத்தை நல்லறமாக வாழும் கணவன் மனைவி வாழ்க்கை முறை கற்பு எனவும் கொள்ளப்பெறுகின்றது. ஆண், பெண் இருவரும் காதலுக்குப் பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கினையே ‘கற்பு' என்கின்றனர்.

தொல்காப்பியர் களவுக்குப் பின்வரும் திருமணத்தையே கற்பு என்கிறார்.
கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதே
(பொருள் 140)

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்கினியரும் களவு மேற்கொள்ளும் எவரும் 
கற்பு மேற்கொள்ள வேண்டும் என்கிறார். கற்பு என்பதுதான் இல்லறவொழுக்க மாகும். 
அதை
மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே
(செய்யுளியல் 179)
என்று குறிப்பிடுகின்றார்.
கற்பு என்பது-  இல்லற ஒழுக்கம். அதாவது களவொழுக்கம் ஒழுகி மணம்செய்து கொண்டோர் 
 கூடியும் வாழ்வதே கற்பெனப்படும். அவ்வொழுத்தின் பாற்படும் மன உறுதியே கற்பெனப்படும்.

கற்பெனும் திண்மைஉண்டாகப்பெறின் (குறள்54).

	
தொல்காப்பியத்தில் "கற்பு" என்று வரும் இடங்களை யெல்லாம் ஆராயின் 
அது "இல்லறம்" என்ற பொருளையே குறித்தல் அறியலாம் அவர் களவியல் 
ஒன்றை வகுத்தது போலவே கற்பியல் என்ற ஒன்றையும் வகுத்துள்ளார். 
திருவள்ளுவரும் களவியலுக்குப் பின் கற்பியல் வைத்துள்ளார்.
எனவே கற்பு என்பதை பெண்களுக்குரியது என்றும், அஃது அவர்கள் இடம் 
மட்டேமே உள்ளது என்றும், அது பெண்ணின் கன்னித்தன்மை சார்ந்த செய்தியாகக் 
கொள்ளக்கூடாது. இனி கற்பு என்பதற்குக் கல்வி என்று பொருள் கொண்டு 
பெண்களைக் கல்வி அறிவுடையவர்கள் ஆக்குவோம். கற்பு என்பதற்கு 
இல்லறவொழுக்கம் எனப்பொருள் கொண்டு வீட்டின் கண் மனையறம் புரிதலை 
பெண்களும், வினையறம் புரிதலை ஆடவரும் மேற்கொண்டு இல்லறம் சிறக்க வாழ்வோமாக.
 
	புலவர் ஆ.காளியப்பன்
	தலைவர் தொல்காப்பியர் பேரவை
	முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்),
	கோயமுத்தூர் 641101 
	அலைபேசி 9788552993 / 8610684232
	மின்அஞ்சல் amuthankaliappan@gmail.com 
	pulavarkaliappan.blogspot.in
	http://www.tholkappiyam.org