கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

தொல்காப்பிய மொட்டுகள்

மொட்டு 3. தொல்காப்பியம் -- காதல் உண்டாகக் காரணம்

ஆக்கம்: புலவர் ஆ.காளியப்பன்
நாள்: 14-06-2019
*-*-*

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
(குறுந்தொகை 40)

                                                                                                                                    
	நெஞ்சம் கலக்கக்காரணம் என்ன? தொல்காப்பியம் கூறுவதை அறிவதற்கு முன் அறிவியல்
அறிஞர்கள் உரைப்பதைக் கண்போம் அவர்கள் “உலக இயற்கை, பொருள்களின் சேர்க்கை
முறையால் புதுப்புதுப் பொருள்களை உண்டாக்கி உலகை வாழ்விப்பது போல ஆண்பால்
பெண்பால் என்னும் வாழ்வியல் அறிவர்கள் ஆண்பெண் கருவை, அவை ஒன்று சேரும் 
பருவமறிந்து ஒன்றுசேர்த்து உருவாக்கி உயிராக்கி உலகை வாழ்வித்து வருகின்றனர். 
ஆகவே கரு உருவாகும் நிலை அடைந்ததும் தானாக எழும் ஓர் உணர்ச்சியாகிய காமத்தால் 
தூண்டப்பட்டு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நாடிக் கூடிக்கழிக்கும் புணர்ச்சியே 
உலகுயிர்த் தோற்றத்திற்கும் வாழ்க்கை நலத்திற்கும் இன்றியமையக் காரணமாக இருக்கிறது" 
என்கின்றனர். பருவம் அடைந்த சமயத்தில், உடலும் மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் 
இருக்கும். எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்! -
இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான 
உணர்வு பெரும் பசி கொண்டவன், உணவைக் கண்டவுடன் உலகை வென்றது போல் மகிழும் 
உள்ள நிலை தான். காதலில் வீழ்வது என்பது ஒருவித வேதியியல் மாற்றம். அது நம் மனித உயிர்த் 
தொகுதியின் இனவிருத்தியை நிலைநிறுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித 
வேதியியல் மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
  
	இயற்கை நம்மை ஒருவகையான நபருக்கு மட்டும் தயார் செய்து வைத்திருக்கிறதாம்.  
ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு தனிப்பட்ட  நாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள் 
அவர்கள் எதிர்ப்படும்போது. புணர்ச்சிக்குக் காரணமாகிய காதல் அரும்பவே ஒருவனும் ஒருத்தியும்
தாமாகவே எதிர்ப்பட்டு கூடுதல் இயற்கை. "முற்செய் வினையது முறையா வுண்மையின்", 
ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து எதிர்ப்பட்டுக் கூடுவது இயற்கைப்  புணர்ச்சி. அன்புடைய 
இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது.  காம வேட்கை மிகுதியால் தான் 
இக்காதல் உருவாகிறது என்கிறார். தொல்காப்பியர் இவ்விருவகை உணர்வும் இளமையில் 
முகிழ்ப்பனவே. காமம் என்பது அழியும். உடம்பைப் பற்றி நிகழும் அவா ஆகும். காதல் என்பது
அழியாத உயிருணர்வைப் பற்றி  நிகழும் அன்பு ஆகும். வாழ்க்கையில் சிலநாள் கழித்தபின் 
காமம் தொலைவுறும் காதல் இறுதிவரை நிலையுறும் என்கிறது தொல்காப்பியம்.

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினும் கடிவரை இன்றே
(தொல்காப்பியம் பொருள் 90)

	
இதன்பொருள்,
ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் இல்லறத்தின் பயனால் அவ்விருவரையும் ஒவ்வொரு பிறவியிலும் 
சேர்த்தும், பிரித்தும் வைப்பதுமான இருவகை ஊழ்வினை உண்டு. அவற்றுள் நல்லூழின் ஆணையால் 
பிணி மூப்புகளின்றி, எப்பொழுதும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குணமும்,குலமும் 
அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடைய தலைமகனும் தலைமகளும் கண்டு, காதல் வயப்படுவர். 
இதில் தலைவன் தலைவியுடன் ஒத்த பண்புடையனாகவோ தலைவியின் மிக்கோனாகவோ இருத்தல் 
வேண்டும். 
 
      இருவேறுருவினரான ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி ஈருடல் ஓருயிராம் என்னும் 
நிலையை உண்டாக்கி ஒருவர்க்குண்டான நலம்,கேடு இருவருக்கும் ஒத்தபங்காகக் கொண்டொழுகும்படிச் 
செய்வது  இருவரையும் மூன்று காலோட்ட விளையாட்டின் நிலையில் வைப்பது இருபாலாரிடத்தும் 
தோன்றி ஒன்று பட்ட காதலன்பே ஆகும். 

     இன்பம், பொருள், அறம் மூன்றும் இணைந்தது வாழ்க்கை. அன்பின் வழியில் அமையும் இந்த 
காதல் உணர்வு தான் உயிரின பெருக்கத்திற்கு மட்டுமின்றி, சாதித்து காட்டும் ஆர்வத்தை தூண்டிச் 
சாமானியரையும் வரலாற்று நாயகர்களாக மாற்றி காட்டியிருக்கிறது ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான 
காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை.
 
	புலவர் ஆ.காளியப்பன்
	தலைவர் தொல்காப்பியர் பேரவை
	முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்),
	கோயமுத்தூர் 641101 
	அலைபேசி 9788552993 / 8610684232
	மின்அஞ்சல் amuthankaliappan@gmail.com 
	pulavarkaliappan.blogspot.in
	http://www.tholkappiyam.org