கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

தொல்காப்பிய மொட்டுகள்

மொட்டு 5. தொல்காப்பியம் - முனைவன் கண்ட முதல் நூல்!

ஆக்கம்: புலவர் ஆ.காளியப்பன்
நாள்: 16-08-2019
*-*-*

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூலாகும்
(தொல்: பொருள். மரபியல் 95)

இதன் விளக்கம்: நல்வினை தீவினை இன்ப துன்பங்களை உண்டாக்கும். இருவகை வினையும் சேராது நீங்கி உள்ள, தூய அறிவினை உடையவன்; அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன் ஆவான். அவன் ஆள்வினை, ஊழ்வினை, சூழ்வினை எனப்பட்ட வினைகளில் சூழ்வினை இல்லாதவன். இப்படிப்பட்ட முனைவன் தன் அறிவுக் கண்ணால் கண்ட உண்மைகளை வெளிப்படுத்தும் நூல் முதல்நூலாகும். தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர். நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் முதல்நூல். முதல்நூலைப் பின்பற்றித் தன் கருத்துகளையும் இணைத்து எழுதப்படும் நூல் வழிநூல். தொல்காப்பியம் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி அதுதான் தமிழின் முதல்நூல் என்று கருதிவிடுதல் கூடாது.

குறிப்பு: டாக்டர் பட்டம் பெற்றவர்களை அழைக்கும் 'முனைவர்' என்ற சொல் இந்தத் தொல்காப்பிய நூற்பாவிலிருந்து பெறப்பட்டதாகும். 'முனைவன்' என்ற சொல்லுக்கு உடல் உயிரைத்தவிர அனைத்தையும் துறத்தல், ஐம்புலன் அடக்கம், உடல்மனத் தூய்மை, நாட்டுநலனை உறுதியோடு தியானித்து அதை அடைதல், கொலை முதலான அறத்திற்கு ஒவ்வாத செயலைச் செய்யாதிருத்தல், போர் முதலிய வன்மையைச் செயற்படுத்தாது இருத்தல், ஆகிய ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பவனே முனைவன் என்று சான்றோர் பொருள் உரைத்துள்ளனர். இப்போது வழங்கும் முனைவர் பட்டத்தை எண்ணிப்பாருங்கள். முனைவர் (அ) பண்டாரகர் (அ) டாக்டர் (ஆங்கிலத்தில் DOCTORATE ) என்பதற்குத் தமிழில் பண்டாரகர் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் தேவநேயப் பாவாணர் ஆவார். டாக்டர் (PhD, பிஎச்.டி) என்ற சொல்லுக்குப் பாவாணர் முன்மொழிந்த பண்டாரகர் என்ற சொல் வழக்கொழிந்தாலும் சரவணத்தமிழனார் உருவாக்கிய முனைவர் எனும் சொல் இன்று நிலைபெற்றுள்ளது. முதலில் தத்துவத்தில் ஆய்வு செய்து அதில் முதன்மை பெற்றவர்களையே Doctor of Philosophy (PhD, Ph.D., or DPhil) என்றனர். அவர்கள் டாக்டர் என்று முன்னால் போட்டுக் கொண்டனர். பின்னர் பிறதுறைகளில் முதன்மை பெற்றவர்களை (ஆய்வு செய்தவர்களை) Doctor of இன்னதுறை எனப்போடாமல் Ph.D., என்ற பட்டத்தையே தந்தனர். மருத்துவர்களும் டாக்டர் எனப்போட்டுக் கொண்டனர். தாய் தந்தையர் பெயர் முன்னாலும் கற்றுப் பெற்ற படிப்புத் தகுதியைப் பின்னாலும் போடுவதே மரபாக இருந்து வருகிறது. அப்படிப்பார்க்கும் போது பெயருக்குப் பின்பே பிஎச்.டி., போட்டால் போதும் முன்னால் டாக்டர் வேண்டியதில்லை. அப்படிப் போடும் போது மருத்துவர்களாகிய டாக்டர்- க்கும் ஆய்வு செய்த டாக்டர் -க்கும் வேறுபடுத்துவதில் சிக்கல் உருவாகிறது. எனவே ஆய்வால் பட்டம் பெற்றவர் தமிழில் முனைவர் (எத்துறையாக இருப்பினும்) என்று பெயருக்குமுன்னாலும் ஆங்கிலத்தில்போடவேண்டும் எனில் பிஎச்.டி., என்று பெயருக்கு பின்னாலும் போடுவதே சிறப்பு.

 
	புலவர் ஆ.காளியப்பன்
	தலைவர் தொல்காப்பியர் பேரவை
	முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்),
	கோயமுத்தூர் 641101 
	அலைபேசி 9788552993 / 8610684232
	மின்அஞ்சல் amuthankaliappan@gmail.com 
	pulavarkaliappan.blogspot.in
	http://www.tholkappiyam.org