உலகத் தொல்காப்பிய மன்றம்
நிகழ்வுகள்

சீனநாட்டு வானொலியில் நேர்காணல்!

நிலம்: தமிழ்மொழி ஒலிபரப்பு மையம், சீனப் பன்னாட்டு வானொலி நிலையம் (CRI), பெய்ஜிங், சீனா-100040.
பொழுது: தி.பி. 2049 கன்னி-(புரட்டாசி) 4, வியாழன் (20-09-2018) காலை 10:00 மணி.
நேர்காணல்: முனைவர் கி. மணிகண்டன், செய்தியாளர், தமிழ் ஒலிபரப்பு பிரிவு.

நான் சென்ற செப்தம்பர் திங்கள் மனைவி மற்றும் சில குடும்ப நண்பர்களுடன் பத்து நாள் சீன நாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக சீன நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். பயணத்தின் சில நாட்களுக்கு முன்பாக உலகத் தொல்காப்பிய மன்றச் செயலாளரும், எனது நண்பருமான முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் செய்த அறிமுகத்தின் வாயிலாக முனைவர் மணிகண்டன் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. முனைவர் மணிகண்டன் அவர்கள் தற்பொழுது சீனாவின் பெய்ஜிங்கில் நகரிலுள்ள பன்னாட்டு வானொலி மையத்தின் தமிழ் ஒலிபரப்புப் பிரிவில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். நான் அங்குச் சுற்றுப்பயணம் செய்யும் செய்தி கிடைத்தவுடன் முனைவர் மணிகண்டன் தாம் பணியாற்றும் வானொலி மையத்தில், எமது உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயள்களைக் கண்டறிய ஒரு நேர்காணலுக்கு, தனது துறையின் ஒப்புதலுடன், ஏற்பாடு செய்து எனக்கு அழைப்பு விடுத்தார். இந்த அறிய அழைப்பைக் கேட்டவுடன் அளவிலா மகிழ்ச்சியுடன் எனது பயணத்தில் அரை நாளை அதற்கென ஒதுக்கி, சீன வானொலி நிலையம் சென்றடைந்தேன்.


முனைவர் மணிகண்டன் அவர்கள் என்னை வானொலி நிலையத்தின் வாயிலில் வரவேற்று, பின் தமிழ் ஒலிபரப்புத் துறைத்தலைவர் திருமதி கலைமகள் எனும் சாவோ ஜியாங் (Zhao Jiang) அவர்களிடம் அறிமுகம் செய்தார். திருமதி கலைமகள் அவர்கள் மிக ஆர்வத்துடன் நலம் வினவி, சிறிது நேரம் என்னுடன் உரையாடி, என் மனைவிக்கு ஒரு பரிசு கொடுத்த பின் நிகழ்ச்சியைத் தொடங்க வழிகாட்டியது என் நினைவில் என்றும் அகலாது.


என்னுடைய நேர்காணல் சீன வானொலியில் சன்னல் நிகழ்ச்சியில் ஐந்து பாகங்களாக 4-10-2018 ( சன்னல் பாகம்-1), 8-10-2018 ( சன்னல் பாகம்-2), 11-10-2018 ( சன்னல் பாகம்-3), 15-10-2018 ( சன்னல் பாகம்-4), 18-10-2018 ( சன்னல் பாகம்-5) ஆகிய நாட்களில் ஒலிபரப்பப்பட்டது. இந்த நேர்காணலில் என்னைப்பற்றியும், எனது கல்வி, ஆராய்ச்சிகள் பற்றியும், தற்போதைய அமெரிக்கா, சீன நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றியும், தொன்மைவாய்ந்த தமிழர், சீனர் கலாச்சாரங்கள் போன்றவற்றின் சிறப்பும்,அமெரிக்க நாட்டின் பொருளுக்கு முதன்மை தரும் கலாச்சாரத்தின் விளைவுகள் பற்றியும்; அக்கலாச்சாரச் சூழலில் வளரும் புலம்பெயர்ந்த தமிழர்களின் இளய தலைமுறையினர்களுக்கு ஏற்ப்படும் தவிர்க்கமுடியா தாக்கங்கள் பற்றியும்; அத்தாக்கங்களை எதிர்நோக்கும் வண்ணம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மொழி,கலாச்சார வழி முயற்ச்சிகள்,குறிப்பாகத் தமிழ் பயிற்றுவிக்கும் பாடசாலைகள் மற்றும் தமிழ் காக்கும் பேரவைகளின் ஒருங்கிணைந்த முயற்ச்சிகள் பற்றியும்,எங்களுடைய உலகலாவிய தொல்காப்பிய மன்றச் செயல்பாடுகள் பற்றியும், நம் தமிழின் தொன்மை காக்கும் தொல்காப்பியத்தின் ஒப்பிலா சில சிறப்புகள் பற்றியும் கலந்துரையாடினோம். சன்னல் நிகழ்ச்சியின் ஐந்து பாகங்களையும் இங்கு கீழே இணைத்துள்ளேன்.


தமிழ் ஒலிபரப்புப் பிரிவில் பணியாற்றி வரும் திருமதி சரசுவதி, திருமதி ஜெயா, திரு. திருமலை சோமு ஆகியோருடன் சிறிது நேரம் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


பேட்டி முடிவடைந்தவுடன் தம்பி மணிகண்டன் அருகிலே இருக்கும் தன் இல்லத்திற்கு என்னை விருந்தினராக அழைத்து, நம் தமிழ் இனத்தின் விருந்தோங்கும் பண்பின் ஓர் உன்னத உதாரணமாகப் பல்சுவை விருந்து கொடுத்து மகிழ்வித்தார். இது இப்பயணத்தின் ஒரு மறக்க இயலாத இனிமையான நிகழ்ச்சி எனலாம். இன்முகம்கொண்டு இனிதான விருந்தளித்த தம்பி மணிகண்டனின் துணைவியார் திருமதி பாக்யலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.


அன்புடன்,
முனைவர் நா.க.நிதி,
உலகத் தொல்காப்பிய மன்றச் செயற்பாட்டாளர்,
வெயின், நியூ செர்சி, அமெரிக்கா.
29-10-2018



நேர்காணல் தொகுப்புகள்: