தொல்காப்பியர் மலரஞ்சலி

ஆக்கம்: திரு வி.மு. உமாபதி
நாள்: 2-12-2019
*-*-*

தொல்காப்பியர் மலரஞ்சலி:

	 தொல்காப்பிய ரெனும் தொன்முனி போற்றி!
	 தொன்மைத் தமிழின் நன்மை போற்றி!
	 தொல்லையில் இலக்கணம் நல்கினை போற்றி!
	 தொட்டிடும் இலக்கிய மட்டளி போற்றி!
	 ஆயிரத் தறுநூற்று பத்தருள் போற்றி!
	 ஆதியில்  தோன்றிய சோதியே போற்றி!
	 ஆனந்த இலக்கணத் தானந்தம் போற்றி! 
	 ஆசியை அருளிடும்  தேன்சுவை போற்றி! 
	 அதங்கோட் டாசான் பதமலர் போற்றி!
	 அருட்கலைத் தமிழின் பெருஞ்சுவை போற்றி!
	 அற்புத இலக்கணத் தற்பரம் போற்றி!
	 அருளினை ஒன்பது இயலவை போற்றி! 
	 எழுத்தது சொல்லெனும் பொருளே போற்றி!
	 எம்பனம் பாரரின் இன்சுவை போற்றி!
	 எழிலார் இலக்கணப் பொழிலே போற்றி!
	 எங்கள் காப்பியப் பூச்சரம் போற்றி! 
	 காப்பியக் குடிமலர் பாச்சுவை போற்றி! 
	 காலம் கடவா ஞானம் போற்றி!
	 காமுறு நற்றவப் பூமணம் போற்றி! 
	 காதலில் உனையே ஓதுவம் போற்றி! 
	 எழுத்தி கார முழுத்தேர் போற்றி!
	 எம்சொல்லதிகாரப் பல்சுவை போற்றி!
	 எழுபொருளதிகார தொழுசுடர் போற்றி! 
	 எல்ஒளித் தமிழ்நெறி சொல்லுவை போற்றி! 
	 கடவுளைக் கந்தழி என்றனை போற்றி!
	 ‘கடி’ என்ற சொல்லின் கருத்துரை போற்றி
	 கல்வியை முதலில் கழறினை போற்றி!
	 கடுஞ்சொல்லற்ற நெடுமொழி போற்றி!
	 நிலந்தரு திருவிற் பாண்டியன் போற்றி! 
	 திகழ் அரங்கேற்றப் புகழ்மொழி போற்றி!
	 நினைக்கும் தோறும் இனிப்பாய் போற்றி! 
	 நிலைமொழித் தமிழின் கலைவல போற்றி! 
	 அத்தெனும் சாரியை அறைந்தனை போற்றி! 
	 அதுமகர ஒற்றுக்கு என்றாய் போற்றி!
	 அன்பின் ஐந்திணை அறிந்தனை போற்றி! 
	 அனைத்துச் சொற்பொருள் குறித்தனை போற்றி!
	 உயிரியல் திரியா என்றாய் போற்றி!
	 உரைசெய் மெய்யொடு சேரினும் போற்றி!
	 உணரும் மாத்திரை கண்ணிமை போற்றி
	 உணர்ந்திட வல்லார்க்கு என்றாய் போற்றி!
	 வினாவெதிர் வரினே செப்பெனப் போற்றி!
	 விளங்கிடு பொருளாய்த் துலங்கினன் போற்றி! 
	 விளைந்திடு காலம் நூற்பா போற்றி!
	 விரிசைவக் கூற்றின் நெறியே போற்றி! 
	 சிதைவில இல்லா நிதியே போற்றி!
	 சிறக்கும் முதல்வா புரப்போய் போற்றி
	 சிறியேன்  மனத்திலும் நிறைவாய் போற்றி!
	 சிவமாம் தமிழின் தவமே போற்றி!
	 உறுப்புக்கள்  நான்காய்  உரைத்தாய் போற்றி!
	 உறுபரி பாடலின் உறுதிறன் போற்றி!
	 உள்ளம் நிறையும் செல்வா போற்றி!
	 உனையே நினைவோம் தினமே போற்றி!
	 பறவையில் ஆண்அவை சேவல் போற்றி!
	 பரமன் மயில்தவிர் என்றாய் போற்றி!
	 பழகும் தமிழின் அழகே போற்றி!
	 பயில்வோர் அருளால் உய்வோர் போற்றி!
	 வண்ணம் இருபது இசைத்தாய் போற்றி!
	 வளர்மதித் தமிழின் குளிர்நிலை போற்றி! 
	 வண்டமிழ் ஓதிடும் கொண்டல் போற்றி!
	 வந்தே என்னுளம் அமர்ந்தாய் போற்றி!
	 எல்லே இலக்கம் என்றனை போற்றி!
	 எங்கள் தமிழின் நன்கலம் போற்றி!
	 எதிரிலாத் தமிழின் அதிபதி போற்றி! 
	 எமதுளக் காப்பிய அமுதே போற்றி!
	 கமம் நிறைந்து இயலும் என்றாய் போற்றி!
	 கருதும் தமிழின் திருவே போற்றி!
	 கற்பது காப்பியக் கடிமணம் போற்றி! 
	 கண்ணின் பயனாய் நண்ணினம் போற்றி!
	 ஒன்றே வேறே உணர்திணை போற்றி!
	 ஒருநூற் பாவில் உயர்ந்தனம் போற்றி!
	 ஒருபெருந் தமிழின் உயர்நிலை போற்றி! 
	 ஒளிதமிழ்க் களிமழை நனைந்தனம் போற்றி! 
	 வினை எனப்படுவது விளக்கினை போற்றி!
	 விளங்கிடும் வேற்றுமை இலையெனப் போற்றி!
	 வித்தகத் தமிழ்நெறித் தத்துவம் போற்றி!
	 விரிதமிழ் மதியின் உரையே போற்றி!
	 உயிர்க்கெலாம் இன்பம் உரித்தெனை போற்றி! 
	 உயிர் இன்பம் விழைதல் உண்டெனை போற்றி!
	 உலகின் திலகம் ஆனாய் போற்றி!
	 உண்மை இலக்கணத் தொன்மை போற்றி!
	 முதல்கரு உரியென மொழிந்தனை போற்றி! 
	 முந்துநூல் கண்டருள் எந்தாய் போற்றி!
	 முனிவன் நீயே பணிவோம் போற்றி!
	 முத்தமிழ்ச் சதுர நர்த்தனம் போற்றி
	 கற்பியல் கண்ட பொற்பே போற்றி!
	 கண்ணிய இலக்கணம் புண்ணிய போற்றி!
	 கருதிடும் பெருநூல் தருகுவை போற்றி!
	 கனியும் தமிழின் இனிமை போற்றி!
	 உவமப் போலி ஐந்தாம் போற்றி!
	 உறுதி சொன்ன காப்பியர் போற்றி! 
	 உருபயன் வினைமெய் சிறப்பே போற்றி!
	 உத்தம இலக்கணம் நித்திலம் போற்றி!
	 செயிர்தீர் காட்சிக் கற்பே போற்றி!
	 செந்தமிழ் வாழ்வினைத் தந்தனை போற்றி!
	 செப்பினை பெருமையும் உரனும் போற்றி!
	 செய்யுளியல் செம்மைச் சிறப்பே போற்றி!
	 இனத்தில் சேர்த்தி உணர்த்தினை போற்றி!
	 இன்னிசைப் புலவரின் நூலே போற்றி!
	 இசைக்கும் புகழே திசைக்கும் போற்றி! 
	 இலக்கண விளக்கம் இமயம் போற்றி!
	 குறிஞ்சி முல்லை மருதம் போற்றி!
	 குளிரும் நெய்தலின் துளியே போற்றி!  
	 குணமா மலையாம் துணையே போற்றி!
	 கும்பிடக் கூப்பிடும் கரங்கள் போற்றி!
	 தமிழெனும் பூவினைத் தூவினம் போற்றி! 
	 தந்திடு தமிழ்த்திறன் தாயே போற்றி!
	 தமிழுக்கு உரிய அமிழ்தே போற்றி!
	 தவமே பணிந்தனம்  நலமே போற்றி! 

வாழ்த்து:

	தொல்காப்பியர் என்னுமொரு தூயவரின் திருநோக்கால்
	பல்காலம் மழைபொழிக பார்மகளும் சீர்பெருக!
	எல்காட்டும் தமிழென்றும் இனிமையுடன் ஓங்கிடுக
	சொல்வேட்கும் உயிர்யாவும் சூழ்ந்தென்றும் வாழ்ந்திடுக!

	துணைதாமே நமக்கென்றும் தொல்காப்பியர் திருவடிகள்
	புணையாகப் பொலிந்திடுமே புவிவாழ்வு ஓங்கிடுமே
	அணையாக நின்றிலங்கி அருந்தமிழின் நிலைகாத்தார்
	இணைதானே இவர்க்கேது இருநிலத்தில் திருவுடையோர்	
 
	திரு வி.மு உமாபதி
	18-19 மதுசூதனன் நகர்
	வானூர்தி நிலையம் அஞ்சல்,
	கோவை 641004.