கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

தொல்காப்பியம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு, திங்கள் அமர்வு-13

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, சப்பான், அமெரிக்கா நாட்டில் நியூசெர்சி (கயிலைப் புனிதர் மருதாசல அடிகளார் பேரூராதினம், தமிழ்நாடு அவர்களின் அருள் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது), பிரித்தானியா நாட்டில் இலண்டன் ஆகிய கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. தமிழகத்தில் புதுச்சேரி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, குளித்தலை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இந்த மன்றம் சிறப்பாகச் செயல்படுகின்றது.

உலகத் தொல்காப்பிய மன்ற அமைப்பை வளப்படுத்துவதற்கு ஈடுபட்டுள்ள எங்கள் முயற்சிக்கு, இன்றைய தமிழ் காக்கும் சான்றோர்களின் நல்லாசிகளும், நல் வழிகாட்டல்களும் பெறவேண்டும் என்ற நோக்கில் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகத்தில் கடந்த திருவள்ளுவராண்டு 2049 ஆவணித்திங்கள் முதலாம் நாள் வெள்ளி (17-08-2018) அன்று மாலை 2:30 மணி முதல் 5:30 மணி வரை கோவை தொல்காப்பியர் பேரவையுடன் இணைந்து தொல்காப்பியம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. (விழா அழைப்பிதல்)

கூட்டப் பொருண்மைகள்:

* தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் நூலின் சிறப்பினைக் குறித்த விழிப்புணர்வைத் உலகளாவிய தமிழ் மக்களிடத்து உருவாக்குதல்.
* தொல்காப்பியத்தின் முதன்மையை, தொன்மையை வெளிப்படுத்தி இளம் தலைமுறையினர் தமிழைக் கற்க வழிசெய்தல்.
* தமிழ் மக்களுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்குத் திருக்குறள் நூல் அறிமுகம் ஆகியுள்ளதுபோல் தொல்காப்பியத்தை அறிமுகம் செய்தல்.
* தொல்காப்பியச் சிறப்புரைக்கும் சிறப்புப் பொழிவுகள் ஊர்தோறும் நடைபெறுவதற்கு வழிகாணல்.
* சமூக ஊடகங்களில் தொல்காப்பியத்தை அறிமுகம் செய்தல்.
* உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பை வளப்படுத்துவது, கிளைகளைத் தொடங்குவது குறித்த வழிகாட்டுதல்களைப் பெறுதல்.

கலந்துரையாடல் நிகழ்வு:

நிகழ்வில் அழைப்பிதழில் குறிப்பிட்டவர்களுடன் தமிழ்ச்சான்றோர்கள், கோவையைச்சார்ந்துள்ள கல்லூரிகளின் தமிழ்த்துறைத் தலைவர்கள் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தொல்காப்பியர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு தவத்திரு சாந்தலிங்கப் பெருமான் திருமடத்தின் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழரங்கில் 17-08-2018 மாலை 4 மணிக்குத் தொடங்கியது. கல்லூரி மாணாக்கியர் இறை வணக்கப் பாடலுடன் விழா இனிதே தொடங்கியது. தொல்காப்பியர் பேரவைச் செயலாளர் புலவர் ப. வேலவன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொல்காப்பியர் பேரவைத்தலைவர் தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ. காளியப்பன் ஆளுமைகளை அறிமுகப்படுத்தியதோடு கலந்துரையாடல் நோக்கத்தின் பொருண்மைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

இவ்விழா தொல்காப்பியர் பேரவையின் 5-08-2018 ஓராண்டு நிறைவுற்றதை ஒட்டி முதலாண்டு நிறைவு விழாவாகவும் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவாகவும் அமைந்தது சிறப்பிற்குரியது.

முனைவர் நாச்சி. க. நிதி முதலில் அமெரிக்கா நியுசெர்சியில் இருந்து வந்திருந்த அவர்கள் தன்னை அறிமுகம் செய்துகொண்டு உரை நிகழ்த்தினார். தொல்காப்பியம் குறித்த சிறப்புகளை எடுத்து உரைத்தார். தொல்காப்பியத்தை உலகமக்களுக்குக் கொண்டு செல்லுதல், தொல்காப்பியர் பேரவையின் வளர்ச்சிக்கு உதவுதல், மாணவர்களுக்குத் தொல்காப்பியம் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்த வேண்டும் என்றார். நியூசெர்சியில் இதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்றார்.

உலகத்தொல்காப்பி மன்றத்தை முனைவர் மு. இளங்கோவன் தொடங்கி உள்ளார். அதன்கிளைகள் சிங்கப்பூர், மலேசியா, சப்பான், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன. முனைவர் இளங்கோ தொல்காப்பியம் தொடர்புடைய அனைத்தையும் ஆவணப்படுத்துவது ஒரு தலையாய நோக்கம் என்றார். மேலும், பேரா.சுந்தரமூர்த்தி-தொல்காப்பியச்செல்வர், தெய்வசிகா மணிக்கவுண்டர்-பஞ்சமரபு, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார், கோவை நா. மகாலிங்கம், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகியோருடைய தமிழ்ப்பணிகள் பற்றி பேசினார். குழந்தைகளின் கண்ணில் தெரியும்படி தொல்காப்பியச் சூத்திரங்களை எழுதி வைக்க வேண்டும் என்று கூறினார் கூட்ட முடிவிலும் நிறைவுரை ஆற்றினார்.

தமிழ்வாணன் (வ.உ.சி பேரர்): 2-6 வயதுள்ள குழந்தைகளின் கற்றல் கேட்டல் நிகழ்வுகளில் தொல்காப்பியச் செய்திகளை இடம்பெறச்செய்ய வேண்டும் என்றார். தொல்காப்பியம் ஓர் அறக்காப்பு நூல் என்றும் இல்லங்களுக்குத் தொல்காப்பியர் இல்லம் எனப்பெயர் வைக்கவேண்டும் என்றும், தமிழர் பண்பாடு வாழ்வு குறித்துப் பேசும் சிலம்பு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

திரு. ஆனந்தராஜ் (பொறியாளர்-ஓய்வு): தொல்காப்பியத்தில் பிறப்பியல் குறித்து நூல் எழுதியுள்ளார். இதில் தமிழ், ஆங்கிலம் ஒலிப்புமுறை குறித்து ஆய்வு செய்து உள்ளார். திருக்குறள் வழி கசடறக்கற்றல், திருக்குறளில் மேலாண்மை குறித்து நூல்கள் எழுதிஉள்ளதைப் பற்றி விளக்கினார்.

திரு. கணேசன் (பள்ளித் தலைமையாசிரியர்-ஓய்வு): தமிழில் எந்த நூலைப்படிக்கவேண்டும் என்றாலும் தொல்காப்பியம் கற்றவர்களால் எளிதில் புரியமுடியும் என்றார். LKG முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை பாடத்திட்டத்தில் தொல்காப்பியத்தைச் சேர்க்கவேண்டும் என்றார்.

கனல்மைந்தன் (அரசு கலைக்கல்லூரிப் பேராசிரியர்-ஓய்வு): அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய நூல் தொல்காப்பியம்அறிவியல், அறம், பண்பாடு நாகரிகம் புவியியல் தொன்மம் ஆகியவற்றைக் கொண்டநூல் சமூகவியல் ஆசிரியருக்கு ஒரு வரலாற்று நூலாக உள்ளது. இன்று வளர்தமிழ் மொழியைக் காக்கின்றது. பன்முக வாசிப்பு - பன்முகத்தன்மை கொண்ட அறிஞர்கள் வளர்க்க முன்வரவேண்டும் என்றார்.

திருமதி செலினாமார்ட்டின்: இன்று அனைவருக்கும் தகுந்தவாறு கட்டணைப்புச் செய்து அன்றாட பயன்பாட்டிற்கு உகந்த நூலாக மாற்றவேண்டும். ஆய்வாளர்கள் பயன்படுத்தும் நூலை பொது மக்களின் மொழியில் பயன்பாடாக உள்ள நூலாக மாற்ற வேண்டும் என்று வலியுருத்தினார்.

முனைவர் திருமாறன்: பெரிய நூல்களை யாரும் படிக்க விரும்புவதில்லை. எனவே சிறு சிறு பகுதிகளாக மாற்றம் செய்து எளிமையாக மாற்றி அனைவருக்கும் தர வேண்டும். தொல்காப்பியம் தொடர்பான போட்டிகள் வைத்து மாணவர்களை ஊக்குவித்துப் பரிசுகள் அளிக்க வேண்டும். நூற்பாக்களை எளிய முறையில் மாணாக்கர்களுக்குப் புரியும்படி கொண்டு செல்ல வேண்டும். பாரமர மக்கள் தொல்காப்பிய விதி தெரியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தவேண்டும் என்றார்.

திரு.அலாவுதீன் : ஒருபேரவை மட்டும் வளர்க்க முடியாது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களின் அறிவு, அனுபவத்தை இவ்வமைப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடிகளார் ஒருகுழுவை உருவாக்கி வழிநடத்த வேண்டும். நாங்கள் அனைவருக்கும் அதனைக்கொண்டு செல்லுகிறோம் என்றார்.

புலவர் கணேசன் (கவையன்புத்தூர் தமிழ்ச்சங்கத் தலைவர்): பள்ளிகளில் ஆறாம் வகுப்புவரை எளிய தொடர்களாக எளிமைப்படுத்தி பாடத்தில் கொண்டு வர தமிழக அரசிடம் வலிறுத்த வேண்டும். 6 முதல் 12 வகுப்பு வரை பாடத்திட்டத்தில் கொண்டுவரச் செய்ய முடியும். இயல்பான நடையில் எளிமையான வழியில் புரிந்த கொள்ளக் கூடிய வகையில் உருக்கவாக்க வேண்டும் என்றார்.

பொன்முடி சுப்பையன் (பேராசிரியர்-ஓய்வு): ஜார்ஜ் பெர்னாட்சா 30 எழுத்துகளில் எல்லா ஒலிகளையும் அடக்கிய ஒரே மொழி தமிழ்தான் என்று கூறியதை நினைவுகூர்ந்தார். என்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

முனைவர் சு.துரை (பேராசிரியர்-ஓய்வு): தொல்காப்பியம் ஏன் பேசப்படவேண்டும், ஏன் பரப்பப்படவேண்டும், ஏன் படிக்கப்படவேண்டும் என்றால், தாய்மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்றால், மொழி கட்டமைப்பு சிதையாமல் இருக்க வேண்டும் என்றால், தொல்காப்பியத்தை மக்களிடம் கொண்டு போகவேண்டும் என்றார்.

முனைவர் சு. அரவிந்த் (தமிழ் இணைப்பேராசிரியர் - கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி): தொல்காப்பியம் இன்றைய மாணவர்கள் பாடத்திட்டத்தில் இல்லை. அதனை நீக்கும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் தொல்காப்பிய நூற்பாக்களை இடம் பெறச்செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களுக்குத் தொல்காப்பிய நூற்பாக்களில் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி பரிசுகள் தரவேண்டும்.கல்லூரி மாணவர்களுக்கு நன்னூல் தொல்கைப்பியம் ஒப்பீடு வடிவில் கடடுரைப்போட்டி பேச்சுப்போட்டி நடத்தி சான்றிதழ்கள் வழங்க வேண்டும். போட்டித்தேர்வுகளில் தொல்காப்பியத்தில் அதிகமான இலக்கணம் சார்ந்த வினாக்கள் கேட்கப்பட வேண்டும். UGCல் தொல்காப்பியத்தில் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு நிதி நல்கை அதிகம் வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் தொல்காப்பியத்தை ஆய்வுப் பொருளாக எடுக்க தமிழ்ப்பேராசிரிகள் வலியுறுத்த வேண்டும் என்றார்.

சிரவை ஆதீனம் அருளுரை: தொல்காப்பியத்தை உலகமெங்கும் பரவச்செய்தல் வேண்டும். இணைய தளம் மூலம் எளிமைப்படுத்தி அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும். திருக்குறள்போல் தொல்காப்பியத்தையும் கொண்டு செல்ல வேண்டும். பெற்றோர்களும் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித்தரவேண்டும். ஹிந்திபேசும் வடக்கத்தியர் குழந்தைகள் தமிழ்ப்படிகிறார்கள். நவீன அறிவியல் கருவிகளைக் கொண்டு தமிழ் வளர்க்கவேண்டும் என்றார்.

சாது சண்முகம் அடிகள் ஆசியுரை: படித்தவர்கள் ஆங்கிலக்கல்வியைக்கற்று வேலைக்குச் சென்றபோது தமிழ்மொழியைக் காத்தவர்கள் பட்டிக்காட்டு மக்களே. தொல்காப்பியம் பற்றிப்பேச வருவோர் முதலில் தமிழ்ப்பண்பாட்டைக் கட்டிக்காத்திடவேண்டும் என்றார். பேரா.பசு மணியம் அவர்கள் எண்ணம், சொல், செயல், தமிழ்ப்பண்பாட்டோடு வாழ்ந்தவர். இப்பேரவை சிறப்புடன் நடைபெறத் தொடர்ந்து முயற்சி எடுக்கவேண்டும். விஜயநகரப்பேரரசு காலத்தில் வந்தவர்கள் இன்னும் தங்கள் தாய்மொழியாகிய தெலுங்கை விடாமல் பேசுகின்றனர். புலம் பெயர்ந்து சென்ற மக்களே தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்கின்றனர் என்றார்.

பேரூர் அடிகள் ஆசியுரை: திருக்குறள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. தொல்காப்பியம் இன்னும் அறியப்படாத நூலாகவே உள்ளது. தொடக்கப் பள்ளிமுதலே தொல்காப்பியம் இருத்தல் நன்று. கல்லூரிகள் இன்று தொல்காப்பியத்தைத் தவிர்க்கின்றன. இளங்கலை வகுப்பில் தொல்காப்பியத்தைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்றார்.

முனைவர் மு. இளங்கோவன்: திரைகடல் தாண்டுவதே பொருள் தேட என்பார். ஆனால் இன்று திரைகடல் தாண்டிச் செல்லும் தமிழ் அல்லாத பாடங்களைப் படித்தவர்கள்தான் தொல் தமிழை வளர்க்கின்றனர். அரசாணையில் உள்ள மாறுபட்ட கருத்துக்களை நீக்க முயற்சி செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி துறை அலுவலர்கள் அமைச்சர் பெருமக்களைச் சந்தித்து தொல்காப்பியத்தைப் பாடத்திட்டத்தில் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றச் செய்ய வேண்டும்.
தொல்காப்பியம் குறித்துக் கருத்தரங்குகள் நடத்தப்படவேண்டும். அனைத்து அமைப்புகளும் இதனை மேற்கொள்ள வேண்டும்.தொல்காப்பிய நூற்பாக்களை குறைவான அளவு வானொலிகள் வலைப் பக்கங்கள் முகநூல்கள், புலனம் போன்றவை மூலமாக நாம் பரப்ப வழிசெய்ய வேண்டும்.
சில கல்லூரிப் பேராசிரியர்கள் நாங்களும் கல்லூரிகளில் மாணாக்கர்களிடையே கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தி தமிழின் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்ற இடத்தை நோக்கித் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்ல முயற்சி எடுப்போம் என்றார்.

திரு கா. உமாபதி (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்): இன்றுடன் முதலாண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்குகிறது. இவ்வமைப்பின் வளர்ச்சிக்குக் காரண கர்த்த பேரூராதீனம் அடிகளார் என்பதை இந்நேரத்தில் நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறோம். அனைவரும் தங்களால் இயன்ற பொருள்உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பேராசிரியர் சாந்தகுமார் : நன்றி உரை தொல்காப்பியம் மெய்ப்பாட்டு பண்பாடு என மக்கள் வாழ்க்கைக்கென அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நூல் தொல்காப்பியம். ஓலைச்சுவடிகளின் புகலிடம் பேரூர்த் தமிழ் கல்லூரியே. தமிழ்ப் பள்ளிகள் மேனாடுகளில் பல்கிப் பெருகி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் தமிழ்ப்பள்ளிகள் குறைந்து ஆங்கில வழிக்கல்வியே முதன்மை பெற்றுள்ளது என்றார்.

கல்லூரிப் பெண்களின் வாழ்த்துப்பாவுடன் விழா இனிதே நிறைவுற்றது.