தொன்மையைப் பேணும் தொல்காப்பியம் தமிழ் இலக்கியத்தின் வரலாறு  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் கொண்டது. அது முதற்கொண்டு ஏராளமான இலக்கிய இலக்கண நூல்கள் தோன்றி, மொழியை வளப்படுத்தியுள்ளன. அந்த அடிப்படையில் தோன்றியதே தொல்காப்பியம்.

 

 தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூல் தொல்காப்பியம். தமிழின் மொழியியலைக் கூறும் நூல் உலகின் முதல் நூல்; திருக்குறளின் முன்னோடி; ஆழிப்பேரலைக்கு அகப்படா நூல்; அனல் புனல் அத்தனையும் வென்ற நூல்;அதங்கோட்டாசான் தடைக்கு விடை கூறி வெளிவந்த நூல்; பனம்பாரனாரின் பாயிரம் கொண்ட நூல்; எல்லா இயங்களுக்கும் (இயம்=இசம் கம்யூனிசம்,சோசலிசம் உள்பட) வேராய் விளங்கும்நூல்;   உயிருக்கு விளக்கம் உரைத்த நூல்; வள்ளுவனையும் கம்பனையும் வளைத்துப் போட்ட நூல்; சிலம்பு தந்த இளங்கோவைச் சிந்திக்க வைத்த நூல்; அறிவியல் துறைகள் அத்துணையையும் அடக்கியநூல்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைப் பகரும்நூல்; நாகரிகச் சிறப்பை நவிலும் நூல்; இத்தனை பெருமைகளையும் இயல்பாய்க் கொண்டது; முழுமையாய்க் கிடைத்த முதல்நூல்; அதுவே தொல்காப்பியம். தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம். காப்புத் (காவல்) பழந்தமிழர் பண்பாட்டைத் தொன்மையைக் காக்கும் நூல்.

 

  தொல்காப்பியம் (பாமரருக்கு) ஏன் அறியப்படா நூலானது,பண்டிதர் மட்டுமே புரிய முடியும். அஃது ஓர் இலக்கண நூல். அதைப் பயில்வது சிற்றுளி கொண்டு பெருமலை பிளப்பதற்கு ஒப்பாகும்  என்று உரைத்து வைத்தனர். வாழைப் பழமாய் உள்ளதைப் பலாக்கனி எனச் சொல்லி மிரட்டினர். அதனால் படிப்பு  மட்டுப்பட்டோர் பயந்து  நின்றனர். உரை எழுதியோர் தன் மொழிப்புலமையை வெளிப்படுத்த, உத்தி என்னும் விதி காட்டி, தம் எண்ணத்தை எல்லாம் கொட்ட நினைத்ததால், பரண்மேல் போடப்பட்டது. மொத்தத்தில் அனைவராலும் எழுத்திலும், சொல்லிலும் எடுத்து ஆளப் படாததே முதற்காரணம்.

 

  ஏன் தொல்காப்பியத்தை முதன்மைப் படுத்தவேண்டும்? எழுத்தையும் சொல்லையும் அவை தரும் பொருளையும் புலவர்கள் படிக்கட்டும். நமக்கு எதற்கு? என்ற மழுங்கிய வாதத்தை விட்டு உண்மை யாதென உணர்வோம். தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப் பெரும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்று வரைத் தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. சிறு இலக்கண விதிகளைக்கூட விட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.  இடைச்சங்கத்தாருக்கும், கடைச் சங்கத்தாருக்கும் இதுவே இலக்கண நூல்; இன்றைக்கும் அந்நிலைதான் தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழி நூல்களும்,சார்பு நூல்களும் தோன்றின. இருப்பினும் இதனை விஞ்சியநூல் இதுவரைத் தோன்றவில்லை. எல்லா நூல்களையும் திருக்குறள் ஆண்டது. திருக்குறளையே ஆண்டது தொல்காப்பியம். தொல்காப்பிய இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு இலக்கியம் திருக்குறளே. உலகிற்கே பொது நூலாகையால் தொல்காப்பிய நூலில் கடவுள் வணக்கம் கூறப்படவில்லை.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றின் இலக்கணங்களை முறைபடக் கூறுவது. உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் இருக்க தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது. பண்டைத் தமிழர் வாழ்வியலை அகம், புறம் என வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர்.

 

  புறம் புறவாழ்வியலோடு இணைந்த புகழ் ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விவரிக்கும். இப்படி வளமாக வாழ்ந்த  தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இஃது ஒளிர்கின்றது ஐந்திலக்கணத்தையும் முத்தமிழையும் பல்கலைகளையும் பற்றிப் பேசுகிறது தமிழில் புதுவதாகத் தோன்றியுள்ள மொழிஇயற்கலை நுட்பமிகு மூல நூலாக – மொழியியல் அறிஞர் போற்றும் நுண்ணியக் கருத்துக் களஞ்சியமாக விளங்குகிறது. இலக்கணமாகவும் மொழி நூலாகவும் அமைவதோடு இலக்கிய ஆராய்ச்சிக் கருவி நூலாகவும் உள்ளது. முன்னிருந்த கருத்துக்கள் அதன் காலத்திருந்த கொள்கைகள் வரவிருக்கும் மாற்றங்கள் என முக்காலத்துக்கும் உரிய கோட்பாடுகளை கொண்டு எக்காலத்தும் இயன்ற ஒன்றாக தமிழினோடு ஒன்றி உயிர்நாடியாக விளங்குகிறது. எனவே தொல்காப்பியத்தை முதன்மைப் படுத்தவேண்டும்.

 

 தொல்காப்பியம் என்னும் நூலை 'ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப் படுபவரும் தி.மு அறுநூற்றி எண்பதாம் (கி.மு.711 உலகம் ஒப்பியது.) ஆண்டு வாக்கில் வாழ்ந்த தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கண நூலை இலக்கிய வடிவில் படைத்தருளினார்.

 

 நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்னும் ஐந்திரம் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'  கண்டிருந்தார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம்மிடையே உலா வருகின்றது.தமிழ் மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்கும் தொல்காப்பியம்.

 

 பாமரரும் அறியும் நோக்குடன் தொல்காப்பியர் பேரவை பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழிக் கயிலைமாமணி சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பேரூர் ஆதீனம் அவர்களால் மக நன்னாளில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று தொல்காப்பியர் நாள் கொண்டாடப்படுகிறது. இத்தகு பெருமைமிகு தொல்காப்பியத்தை ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் இருக்கச் செய்வதே தொல்காப்பியப் பேரவையின் நோக்கம். நோக்கம் நிறைவேறத் தமிழ்கூறு நல்லுலகம் உதவுக!

 

 

தொல்காப்பியச்செம்மல்

புலவர் ஆ.காளியப்பன் க.மு.,கல்.மு.,

தலைவர் தொல்காப்பியர் பேரவை  , 

முத்தம்மாள் நிலையம்,பூலுவபட்டி(அஞ்),

கோயமுத்தூர் 641101

அலைபேசி 9788552993 / 8610684232

மின்அஞ்சல் amuthankaliappan@gmail.com,

pulavarkaliappan.blogspot.in,  

www.tholkappiyam.org